Tuesday 30 June 2015

வாழ்க்கை வாழ்வதற்கே!

வாழ்க்கை வாழ்வதற்கே!



 ஹூம்.......நல்லா வக்கணையா கொட்டிக்க வேண்டியது.....  தெரு பொறுக்கிங்களோட சேந்து நல்லா ஊரச்சுத்த வேண்டியது.....  இதுதான ஓன் வேல! வேறென்ன வேல இருக்கும்.... படிக்கறப்ப ஒழுங்கா படிக்காம ஊரச்சுத்தினா இப்டிதான் நல்ல மார்க்கு கெடக்காது.... வேல கெடக்க நாயா அலயனும்...   ஒனக்கெங்க நல்ல வேல கெடக்க போகுது.... ஒண்ணுத்துக்கும் ஒபயோமில்லாத வெட்டிப்பய.... என்னடா!  மொறக்கற! ஒதவாக்கற.....


 அப்பாவின் இது போன்ற சுடு சொற்கள் இப்போதெல்லாம் காதுக்குள் அடிக்கடி கேட்கிறது. உயிரே போய் விடுமளவு மனம் வலிக்கிறது. பேசாமல் செத்து விடலாம் என்றால் அம்மாவை நினைத்தால் பாவமாக இருக்கிறது. நான் செத்துப் போனால் அம்மா நடைபிணமாகி விடுவாள். அப்பாவுக்கும் இதுபோல கஷ்டமாக இருக்குமா? அல்லது விட்டது சனியன் என்று இருந்து விடுவாரா?


சே! இப்படியெல்லாம் நினைக்கவே கூடாது. அப்பா நம்ம நல்லதுக்குத் தானே சொல்றாரு! அவரு சொல்றதும் சரிதானே! படிக்கும் போது நல்லா படிக்காம இருந்துட்டு இப்போ அவரு திட்றாரேன்னு நெனக்கறது எந்த வகையில நியாயம்!

தனக்குத் தானே சமாதானம் செய்து கொண்டான் கமலக்கண்ணன்.

"கமலக்கண்ணா! டேய்! கமலக்கண்ணா!"

அம்மாவின் குரல் கேட்டு சமையலறை நோக்கி ஓடினான்.

"டேய்! அண்ணாச்சி கடைல போயி 50 கிராம் மஞ்சத்தூளும் கால் கிலோ வெல்லமும் வாங்கிட்டு வாடா! ப்ளீஸ்!" அம்மா கொஞ்சினாள்.

"ஹ்க்கும்! ஹ்க்கும்! என்னம்மா இது! என்னய எப்ப பாத்தாலும் எதுனா வேல சொல்லிட்டே இருக்க! நான் போவே மாட்டேன்!"

"என்னடா, பத்தாவது படிக்கற பையன் மாதிரி அலுத்துக்கற! ப்ளீஸ், போய் வாங்கிட்டு வாடா!"

அப்பா ஒரு வகை என்றால், அம்மா வேறு வகை. அம்மாவின் கொஞ்சலில் மனம் சமாதானமாகி கடைக்குப்போனான், கமலக்கண்ணன்.

"என்ன தம்பி! போனவாரம் போன இண்ட்ரிவ்யூ ஊத்திக்கிச்சா?"

அண்ணாச்சி இளித்துக்கொண்டே வாழைப்பழத்தில் ஊசியேற்றினார்.

"ஹூம்!" அவரைப்போலவே இளித்து வைத்தான்.

அம்மா கேட்டவற்றை வாங்கிக் கொண்டு நகரும்போது, "அண்ணாச்சி! உங்க பையன் திடீர்ன்னு மயக்கம் போட்டு விழுந்திட்டான். பேச்சு மூச்சில்லாம கிடக்கறான். அக்கா உங்கள கையோட கூட்டிகிட்டு வரச்சொன்னாங்க!" பக்கத்து வீட்டு சின்னையன் படபடவென்று கூறிவிட்டு ஓடினான்.

"டேய்! எசக்கி! கடையப் பாத்துக்கடா! ஐயனாரப்பா! எம்புள்ளயக் காப்பாத்து! என்ன செய்யறதுன்னு புரியலயே!" பெருங்குரலெடுத்து அழுதபடி ஓடினார், அண்ணாச்சி.

கமலக்கண்ணன் அண்ணாச்சியுடன் ஓடினான். அவருடைய மகன் கதிர்வேலன் இவனுக்கு இரண்டாண்டு மூத்தவன். ஆனால் இவனுடைய நண்பர்கள் குழுவில் கதிர்வேலும் ஒருவன்.

அங்கு மயங்கிய நிலையில் கதிர்வேலன் கயிற்றுக் கட்டிலில் கிடந்தான். அவனுடைய அம்மா அருகில் அமர்ந்து ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தாள். சுற்றி நிறைய தெரிந்ந முகங்கள் நின்று கொண்டிருந்தார்கள். ஆனால் யாரும் எதுவும் செய்யத் தெரியாமல் உச்சுக் கொட்டிக் கொண்டிருந்தார்கள்.

"அண்ணாச்சி வண்ட்டாரு! புள்ளய டாக்டராண்ட கூட்டிட்டு போங்க அண்ணாச்சி!" யாரோ ஒரு அறிவாளி கூறினார்.

"கார் இருக்கு! ஆனா யாரு ஓட்டுவாங்க! ஓட்டத் தெரிஞ்சவன்தான் உயிந்து கெடக்கானே!" இது இன்னொரு அறிவாளி.

கமலக்கண்ணனால் இதைக் காணச் சகிக்கமுடியவில்லை. வேகமாக வீட்டுக்கு ஓடினான். அம்மாவிடம் அவள் வாங்கி வரச் சொன்னதை அவள் கையில் கொடுத்துவிட்டு தன்னுடைய அலமாரியில் எதையோ தேடினான். சில நிமிடங்களில் தேடியதைக் கண்டு எடுத்துக் கொண்டு, "அம்மா! முக்கியமான வேலையா போறேன்! வர லேட்டாகும்!" சொல்லிவிட்டு அவசரமாக வீட்டுக்கு வெளியே வந்தான்.

அப்பா உள்ளே வந்துகொண்டிருந்தார். அவர் தன் அர்ச்சனையை ஆரம்பிக்கும் முன் அவர் கால்களில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து எழுந்தான்.

வியப்புடன் பார்த்தவரைப் பார்த்து, "அப்பா ஒரு உயிரைக் காப்பாத்தப் போறேன்! நான் பத்திரமா போயிட்டு வரணும்ன்னு வாழ்த்தி அனப்புங்கப்பா! அந்த உயிருக்கும் எதுவும் கெடுதல் வந்துடக் கூடாதுன்னு வேண்டிக்குங்கப்பா!" வேகமாகப் பேசினான்.

"பத்திரமா போய்ட்டு வாப்பா! அந்த உயிருக்கும் எதுவும் ஆகாதுப்பா! சீக்கிரம் கிளம்பு!" என்று அவசரமாகக் கூறிவிட்டு சுவாமி அலமாரியிலிருந்து விபூதி எடுத்துப்பூசிவிட்டார் அவனுடைய அப்பா!

அப்பா விபூதி இட்டதும், தன் வலது உள்ளங்கையில் கொஞ்சம் விபூதி எடு்த்துக் கொண்டு அண்ணாச்சி வீட்டுக்கு ஓடினான்.



அங்கே இன்னுமும் யாரும் எதுவும் உருப்படியாய் செய்யாமல் உச்சு கொட்டிக் கொண்டிருந்தார்கள்.

"அண்ணாச்சி! வாங்க ! நான் கார் ஓட்டறேன்! கதிரை நான் டாக்டர்கிட்ட கூட்டிட்டு வரேன்! அவனைக் காரில ஏத்துங்க!"

கூறிக் கொண்டே கமலக்கண்ணன் தன் கையிலிருந்த விபூதியை கதிர்வேலனின் நெற்றியில் பூசிவிட்டான்.

அவன் சொல்லிலும் செயலிலும் நம்பிக்கை வரப்பெற்றவராய் உள்ளே ஓடிச் சென்று கார் சாவியைக் கொண்டு வந்து கமலிடம் கொடுத்தார்.

"ஒரு கை புடிங்க!" பேசிக் கொண்டிருந்தவர்கள் உதவியுடன் கதிரை வண்டியில் ஏற்றிக் கொண்டு காரை ஓட்ட ஆரம்பித்தான் கமலக்கண்ணன்.

கமலின் உதவியால் தக்க நேரத்தில் கதிர்வேலன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு காப்பாற்றப் பட்டான்.

அண்ணாச்சி கமலை வாயாரப் புகழ்ந்தார். தனக்குத் தெரிந்த கால் ட்ரைவர் ஏஜென்ஸியில் வேலை வாங்கித் தந்தார்.

கமலின் நண்பர்களும் கார் ஓட்டப் பயிற்சி எடுத்துக் கொண்டு கால் ட்ரைவர் வேலைக்குப் போகிறார்கள். இப்போதெல்லாம் கமலை அவனுடைய அப்பா திட்டுவதே இல்லை.

"கமல்! நல்லா சாப்பிடணும்பா! வண்டி ஓட்டத் தெம்பு வேணும்ல! நல்லா ரெஸ்ட் எடு!" இது அவனுடைய அம்மா சொல்வதில்லை. அப்பாதான் இவ்வளவு பாசமாய் சொல்கிறார்.

கமலக்கண்ணன் வாழ்க்கையை சந்தோஷமாக எதிர்கொள்ளக் கற்றுக் கொண்டு விட்டான். இனி அவன் வாழ்க்கைப் பயணம் அவனுடைய கார் பயணம் போலவே சுகமாக இருக்கும்.


♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥


Friday 5 June 2015

அரியது! பெரியது! இனியது! கொடியது!

 அரியது! பெரியது! இனியது! கொடியது!



Murugan 18


அரியது 


அரியது கேட்கின் வரிவடி 
வேலோய்
அரிதரிது மானிடர் ஆதல் அரிது 
மானிடர் ஆயினும் கூன்குருடு செவிடுபேடு நீங்கிப் பிறத்தல் அரிது 
பேடு நீங்கிப் பிறந்த காலையும் ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்தானமும் தவமும் தான்செயல் அரிது
தானமும் தவமும் தான்செய்வ ராயின்
வானவர் நாடு வழிதிறந் திடுமே. 


பெரியது 


பெரியது கேட்கின் எரிதவழ் வேலோய்
பெரிது பெரிது புவனம் பெரிது புவனமோ நான்முகன் படைப்பு நான்முகன் கரியமால் உதிரத்தில் உதித்தோன்கரிய மாலோ அலைகடல் துயின்றோன்அலைகடல் குறுமுனி கலசத்தில் அடக்கம்கலசமோ புவியிற் சிறுமண் புவியோ அரவினுக்கு ஒருதலைப் பாரம்அரவோ உமையவள் ஒருசிறு மோதிரம்உமையோ இறைவர் பாகத் தொடுக்கம்இறைவரோ தொண்டர் உள்ளத் தொடுக்கம்தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே. 






இனியது


இனியது கேட்கின் தனிநெடு வேலோய்
இனிது இனிது ஏகாந்தம் இனிது அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்அதனினும் இனிது அறிவினர்ச் சேர்தல்அதனினும் இனிது அறிவுள் ளாரைக்கனவிலும் நனவிலும் காண்பது தானே. 


கொடியது 


கொடியது கேட்கின் நெடியவெல் வேலோய்!
கொடிது கொடிது வறுமை கொடிதுஅதனினும் கொடிது இளமையில் வறுமைஅதனினும் கொடிது ஆற்றொணாத் தொழுநோய்அதனினும் கொடிது அன்பிலாப் பெண்டிர்அதனினும் கொடிது இன்புற அவர்கையில் உண்பது தானே. 



♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪

Friday 29 May 2015

ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி பாதம்

ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி பாதம்







ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரியின் பாதம்
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரியின் பாதம்
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரியின் பாதம்
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரியின் பாதம்.


1.

ஓங்காரப் பொருளாய் விளங்கும் பாதம்
உபநிஷத்துகள் ஒலிக்கும் பாதம்
உலகமெல்லாம் பெற்ற பாதம்
உண்மை வஸ்துவான பாதம்.
( ஸ்ரீ ராஜ)


2.

ஸ்ரீ சக்ரத்தில் இருக்கும் பாதம்
சின்மயமாய் விளங்கும் பாதம்
சர்ச்சிட கிரந்தையை அறுக்கும் பாதம்
சிவனுட பாதத்தில் அமர்ந்த பாதம்.
( ஸ்ரீ ராஜ)

3.

ரீங்கார ப்ரியமான பாதம்
ஹ்ருதயம் தன்னில் அமர்ந்த பாதம்
எங்கும் நிறைந்து இருக்கும் பாதம்
ஏக ப்ரும்மமாய் விளங்கும் பாதம்.
( ஸ்ரீ ராஜ)


4.

நசிய ப்ரபஞ்ச தீத பாதம்
நானென்ற அகந்தையை ஒழிக்கும் பாதம்
நம்பும் அடியரைக் காக்கும் பாதம்
நாதாந்த வடிவான பாதம்.
( ஸ்ரீ ராஜ)


5.

யதிகளால் துதி செய்யும் பாதம்
எஃஞாதிகளால் ஏற்றும் பாதம்
ப்ரக்ஞையை வெளியில் அழைத்த பாதம்
ப்ரம்மமும் நானென் றுரைத்த பாதம்.
( ஸ்ரீ ராஜ)


6.

மகத்துக்களாலே அறியும் பாதம்
மனத்தினிருளை மாற்றும் பாதம்
மோஹாதிகளை துளைக்கும் பாதம்
மெய்யடியாரால் ஸ்துதிக்கும் பாதம்.
( ஸ்ரீ ராஜ)


7.

சிதம்பரத்தில் ஜ்வலிக்கும் பாதம்
சிவகாமி என்னும் பேர் பெற்ற பாதம்
சனகாதிகளை போற்றும் பாதம்
தானே தானாய் விளங்கும் பாதம்.
( ஸ்ரீ ராஜ)


8.

வாக் மனோகரமான பாதம்
வான் வடிவாய் இருக்கும் பாதம்
வல்வினையை தீர்க்கும் பாததம்
வஸ்து மயமான பாதம்.
( ஸ்ரீ ராஜ)


9.

ஸத்குருவாய்  வந்த பாதம்
சந்தேகத்தை துளைக்கும் பாதம்
நித்ய வஸ்துவான பாதம்
சக்தி ராஜேஸ்வரியின் பாதம்.



ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரியின் பாதம்
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரியின் பாதம்
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரியின் பாதம்
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரியின் பாதம்.






♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥



 

Thursday 28 May 2015

நமச்சிவாய மந்திரம்

நமச்சிவாய மந்திரம்

 
 
 


ஓம் நமச்சிவாய ஓம் |
ஹ்ரீம் நமச்சிவாய ஓம் ||
க்ரீம் நமச்சிவாய ஓம் |
சிவோம் நமச்சிவாய ஓம் ||

1.
அருளளிக்கும் மந்திரம் அரூபமான மந்திரம் |
அன்பர் நாவிலே விளங்கி அவனியாளும் மந்திரம் ||
( ஓம் நமச்சிவாய)

2.
ஆதியான மந்திரம் அனாதியான மந்திரம் |
ஆகமப் ப்ரம்மமான தீதமான மந்திரம் ||
( ஓம் நமச்சிவாய)

3.
இரவிலும் விழித்திருந்து காத்து நின்ற மந்திரம் |
ஈஸ்வர ப்ரபுத்வமாகி ஹ்ருதயமேகும் மந்திரம் ||
( ஓம் நமச்சிவாய)

4.
உத்தமர்க்கெலாம் இணங்கி உதவி செய்யும் மந்திரம் |
ஊறு செய்யும் துஷ்டருக்கு மாறு செய்யும் மந்திரம் ||
( ஓம் நமச்சிவாய)

5.
என்னை என்னுள் ஆக்கி என்னை ஏத்தும் இந்த மந்திரம் |
ஏகதந்த மந்திரம் அநேக தந்த மந்திரம் ||
( ஓம் நமச்சிவாய)





6.
ஐந்தடங்கி நாலடங்கும் ஐந்தெழுத்து மந்திரம் |
ஆரெழுத்து மந்திரத்தில் நீரெழுத்து மந்திரம் ||
( ஓம் நமச்சிவாய)

7.
ஒன்றுள் ஒன்று ஒன்றுமாகி உதயமாகும் மந்திரம் |
ஓதுகின்ற பேரை என்றும் ஆதரிக்கும் மந்திரம் ||
( ஓம் நமச்சிவாய)

8.
ஜம்பு பக்ஷமென்பதும் ஸமஸ்தமான மந்திரம் |
சாந்தியோக மந்திரம் கலாவதார மந்திரம் ||
( ஓம் நமச்சிவாய)

9.
ஷிவ ஸமாதி மந்திரம் ஷிவகணங்கள் மந்திரம் |
ஸ்ரீதரன் கணங்கள் தோறும் ஜபிக்கும் ஜீவ மந்திரம் ||
( ஓம் நமச்சிவாய)

10.
ஜெயமளிக்கும் மந்திரம் ஜெயந்தி நின்ற மந்திரம் |
சேர்த்து வைத்த முன்வினைகள் தீர்த்து வைக்கும் மந்திரம் ||
( ஓம் நமச்சிவாய)

11.
சோர்வை மாற்றும் மந்திரம் சுகம் கொடுக்கும் மந்திரம் |
சொர்ணபிம்ப கவசகும்ப லிங்கஜோதி மந்திரம் ||
( ஓம் நமச்சிவாய)

12.
ஸத்ஸ்வரூப மந்திரம் ஜகஸ்வரூப மந்திரம் |
சூலமேந்தி என்னுள்ளே துலங்கும் மூல மந்திரம் ||
( ஓம் நமச்சிவாய)

13.
ஞான யோக மந்திரம் ராஜராஜ மந்திரம் |
ஞான ரக்ஷ யால கண்ட நாடளிக்கும் மந்திரம் ||

ஓம் நமச்சிவாய ஓம் |
ஹ்ரீம் நமச்சிவாய ஓம் ||
க்ரீம் நமச்சிவாய ஓம் |
சிவோம் நமச்சிவாய ஓம் ||





♪♪♪♪♪♪♪♪

Sunday 15 March 2015

அன்பு மனம்

அன்பு மனம்




இன்று  பேருந்தே கிடைக்காமல் அவதிப்பட நேரும் என்று கவிதா நினைக்கவேயில்லை. நெடு நேரம் கழித்து தொங்கியபடியே வந்த பேருந்தில் வேறு வழியில்லாமல் முட்டி மோதி ஏறிவிட்டாள். நிற்க முடியாமல் தவித்தாள். அடிபட்ட இடமெல்லாம் எரிந்தது. உடம்பெல்லாம் வலித்தது. பசி வயிற்றைக் கிள்ளியது. அவள் இறங்க வேண்டிய பம்மல் வந்தவுடன் கவிதா அவசர அவசரமாக பேருந்திலிருந்து இறங்கினாள். கஷ்டப்பட்டு கூட்டத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு இறங்குவதற்குள் அவளுக்கு போதும் போதுமென்றாகிவிட்டது. இத்தனைக்கும் அலுவலகத்திலுருந்து சீக்கிரமாகவே  கிளம்பிவிட்டாள்.



கவிதா சென்னை தேனாம்பேட்டையில் ஒரு தனியார் நிறுவனத்தில் கணக்கராக பணிபுரிந்து வந்தாள். அவள் கணவன் தினேஷ் பல்லாவரத்தில் ஒரு கம்ப்யூட்டர் விற்பனை மற்றும் பழுது பார்க்கும் கடை வைத்து பிழைப்பு நடத்திக்கொண்டிருந்தான். தொழில் ஏதோ பேருக்கு ஓடிக்கொண்டிருந்து. ஆனால் அவன் நம்பிக்கையுடன் உழைத்துக் கொண்டிருந்தான். அவர்களுக்குத் திருமணமாகி ஒன்றறை ஆண்டுகள்தான் ஆகிறது. அதற்குள், இன்னும் குழந்தை பிறக்கவில்லையென்று அவள் மாமியார் விசாலம் அவளை பேயோட்டு ஓட்டிக்கொண்டிருந்தார். அவளுக்கு மாமனார் இல்லை. தனியார் அலுவலகத்தில் ப்யூன் வேலை செய்து வந்தவர், தினேஷ் சிறியவனாக இருந்தபோது ஒரு சாலை விபத்தில் இறந்துவிட்டார். அவனுடைய அம்மா விசாலம், அவனை வளர்க்க மிகவும்  கஷ்டப்பட்டார். அதிகம் படிக்காத அந்தத் தாய் இரவு பகல் பாராமல் பல வீடுகளில் சமையல் வேலை செய்தும் பத்து பாத்திரம் தேய்த்தும் சம்பாதித்து அவனை பட்டப்படிப்பு படிக்க வைத்தார்.
அவன் நன்றாகப் படித்தானேயொழிய வேலைக்குப் போய் சம்பாதிக்கவில்லை. அதில் அவனுக்கு நாட்டமும் இல்லை. அவன் கனவுவெல்லாம் தனியாக ஒரு தொழில் தொடங்கி அதை வளர்க்க வேண்டும், அதன் மூலம் பல பேருக்கு வேலை தர வேண்டுமென்பதுதான்.


மூன்று பேர் கொண்ட குடும்பத்தை ஓட்டவே அவளுக்கும் அவள் கணவனுக்கும் முழி பிதுங்குகிறது. இந்த லட்சணத்தில் ஒரு குழந்தை வேறு பிறந்தால் அவ்வளவுதான், தெருவிலிறங்கி பிச்சைதான் எடுக்க வேண்டிவரும் என்று இருவரும் பிள்ளைப்பெற்றுக்கொள்வதை தள்ளிப்போட்டனர். கவிதாவுக்கு அவள் மாமியாரிடம் பாசம் இல்லையென்று சொல்லிவிட முடியாது. பாசம் உண்டு. கஷ்டப்பட்டு உழைத்து பிள்ளையை படிக்க வைத்ததால் அதிக மதிப்பும் உண்டு. மகன் திருமணத்தில் அது வேண்டும் இது வேண்டும் என்று அலட்டாமல் இருந்ததுடன் "நீ என்னத்த கொண்டு வந்திட்ட" என்று கேட்காமல் அன்று முதல் இன்று வரை பெருந்தன்மையாக நடந்து கொள்கிறார் என்று பெருமையும் உண்டு. ஆனால் அவர் உழைப்பாளி என்பதால், ஒரு நிமிஷம் கூட உட்கார விடாமல், இதைச் செய், அதைச் செய் என்று தொணதொணப்புவதுதான் பிடிக்காது.


கவிதாவுக்கு இன்று வேலை சீக்கிரமாகவே முடிந்துவிட்டது. எப்போதும் சிடுசிடுவென்று முகத்தை வைத்துக்கொண்டு சக்கையாக பிழிந்து வேலை வாங்கும் அவளுடைய மேலதிகாரி ஏதோ நல்ல மனநிலையில் இருந்ததால் அவள் கிளம்ப அனுமதித்தார். தினமும் கிளம்பும் நேரத்தை விட 15 நிமிடங்கள் முன்னதாகவே கிளம்பினாள்.


பேருந்து நிறுத்தத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. கோட்டையருகே ஏதோ மறியல் போராட்டமாம். அதனால் சில மணி நேரமாக பேருந்தே வரவில்லை.
வீடு வந்து சேர லேட்டாகும் என்று தகவல் சொல்லலாம் என்று கைப்பேசியை எடுத்தாள். அது சார்ஜ் இல்லாமல் அணைந்து விட்டிருந்தது. சே! இந்த டப்பா செல்லில் சார்ஜே நிக்க மாட்டேங்குது. முதலில் இத தூக்கிப் போட்டுட்டு ஒரு புது செல் வாங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள். பின்னாலேயே, குடும்ப செலவை சமாளிக்க முடியாமல் மாமியாரின் கண் ஆபரேஷன், அதைவிட பெரியதாய்  குழந்தைப் பிறப்பையே தள்ளிப் போட்டிருக்கிறோம்! இதில் புது செல் எப்படி வாங்குவது. ஹ்ம்ம்......... இன்றைய காலகட்டத்தில் ஆடம்பரம் என்று முன்பு நினைத்திருந்த செல்போன், இருசக்கர வாகனம் போன்றவை அத்தியாவசிய பொருட்களாகி விட்டது. அதை நினைத்துப் பாரக்கக்கூட முடியாத தன் விதியை நொந்தபடி பேருந்துக்காக காத்திருக்கலானாள்.


தொங்கியபடி வந்த பேருந்தில் நசுங்க மனமில்லாமல் இரண்டு பேருந்துகளை தவற விட்டாள். அடுத்து வந்த பேருந்தில் ஏற முயன்று கீழே விழுந்தாள். அருகிலிருப்பவர்கள் எழுப்பி விட்டார்கள். அதற்குள் கூட்டத்தில் சிலர் அவள் கைகளையும் கால்களையும் மிதித்து விட்டனர். தரையில் விழுந்ததால் கொஞ்சம் சிராய்ப்பு வேறு. அவள் எழுந்து  சுதாரிப்பதற்குள் பேருந்து நகர ஆரம்பித்துவிட்டது. அவள் அரண்டுவிட்டாள். ஆனால் சிலர் அவள் எழுந்து கொள்ள அவளுக்கு உதவிசெய்தனர். ஒரு பெண் தண்ணீர் கொடுத்து அவளை ஆசுவாசப்படுத்தினார். பின்னர் அவரவர் அவரவர் வேலைகளைப் பார்த்துக்கொண்டு நகர்ந்துவிட்டனர்.


செய்தி சேகரிக்கும் தனியார் தொலைக்காட்சி ஊழியர்கள் மக்கள் கூட்டத்தையும் நெறிசலுடன் வரும் பேருந்துகளையும் படம் பிடித்துக் கொண்டிருந்தார்கள். கவிதாவுக்கு கோபம் கோபமாக வந்தது. கண்களில் குளம் கட்டியது. மறியல் செய்ய இவர்களுக்கு வேறு இடமே கிடைக்காதா? சே! இவர்கள் என்ன மனிதர்கள்? அடுத்தவர்களுக்கு கஷ்டத்தைக்  கொடுத்து விட்டு அவர்கள் கஷ்டத்தைப்பற்றி எடுத்துக்கூறி மறியல் செய்தால் என்ன பலன் கிடைக்குமோ? இதில் இந்த டி விகாரர்கள் வேறு! தன் பங்குக்கு படம் பிடிக்கிறேன் பேர்வழி என்று இடைஞ்சல் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். இப்படிப் படம் பிடித்து பணம் பண்ணுகிறார்கள். மக்களின் கஷ்டத்தைக்கூட பணம் பண்ணும் பெருச்சாளிகள்! இதனால் யாருக்கு என்ன பயன்.


அதன் பின்னர் நெடு நேரம் கழித்து தொங்கியபடியே வந்த பேருந்தில் வேறு வழியில்லாமல் முட்டி மோதி ஏறிவிட்டாள். வந்த பேருந்து நத்தை போல மெதுவாக ஊர்ந்து ஊர்ந்து ஊரைச்சுற்றி ஒருவழியாக அவள் இறங்குமிடமான பம்மல் வந்து நின்றது. கடைசிவரை நின்றுகொண்டேதான் இருந்தாள்.கஷ்டப்பட்டு கூட்டத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு இறங்குவதற்குள் அவளுக்கு போதும் போதுமென்றாகிவிட்டது.
எப்போதும் வீட்டுக்கு வரும் நேரத்தை விட இரண்டரை மணி நேரம் தாமதமாகியதுதான் மிச்சம். வழியில் காய்கறிகளையும் சில மளிகை சாமான்களையும் மாமியாருக்கு முக்கியமாக காலையில் அவர் வாங்கி வரச்சொன்ன மூட்டு வலி மருந்தையும் வாங்கிக்கொண்டு வீடு நோக்கி நடக்க முடியாமல் நடந்தாள். உடல் வலி ஒரு பக்கம், பசி ஒரு பக்கம் என்று அவஸ்தைகளுடன் போராடியபடி வீடு வந்து சேர்ந்தாள். இன்று லேட்டானதற்கு மாமியார் என்ன கத்தப்போகிறாரோ, நினைத்தாலே குலை நடுங்கியது. ஊரில் உள்ள பெயர் தெரிந்த, தெரியாத தெய்வங்களையெல்லாம் துணைக்கு அழைத்து வேண்டியபடி வாசல் கேட்டைத் திறந்து கொண்டு வீட்டுக்குள் நுழைந்தாள்.
அம்மா! தாயே! கப்பாத்தும்மா! ப்ளீஸ்! மனதுக்குள் அம்மனை துணைக்கழைத்தபடியே வீட்டுக்குள் மாமியாரின் தலை தென்படுகிறதா என்று பார்வையை செலுத்தினாள்.


ஆத்தா! மகமாயி! காப்பாத்திட்ட....... என்று கூறி கண்களைத் துடைத்தபடியே ஓடி வந்தார் அவளுடைய மாமியார் விசாலம்.  மாமியாரின் முகத்தைப் பார்த்தாள். அழுது அழுது கண்கள் சிவந்து, முகம் வீங்கியிருந்தது. அவ்வளவுதான்! கவிதாவுக்கு தன் வலி, பசி எல்லாம் மறந்தது. பதறிப்போய், "என்ன அத்தை! என்ன ஆச்சு! உங்க உடம்புக்கு ஒண்ணுமில்லையே! மூட்டு வலி ரொம்ப ஜாஸ்தியாயிடுச்சா? ஸாரி அத்தை! ரொம்ப நேரம் பஸ்ஸே இல்லை! அதான் லேட்டாயிருச்சு அத்தை!" என்று கூறியபடியே கையிலிருந்தவைகளை கீழே வைத்துவிட்டு ஹாண்ட் பேகிலிருந்து மூட்டு வலி தைலத்தை எடுத்தாள். "உக்காருங்கத்தை! தைலம் தேச்சு விடறேன்!" நிறுத்தாமல் பேசிய மருமகளைப் பாரத்த விசாலத்துக்கு கண்கள் பனித்தது.

"அம்மா! கவிதா! முதல்ல நீ உக்காரும்மா! எங்க அடிபட்டுச்சுன்னு பாக்கறேன்! ஐயா! தினேசு! கவிதா வந்திட்டாப்பா! டிபன் கொண்டு வா!" என்று கண்கலங்கியபடி கூறிக்கொண்டே அவள் கையிலிருந்த தைலத்தை வாங்கிக் கீழே வைத்துவிட்டு அவளை உட்கார வைத்தார், விசாலம்.

"இதோ வந்துட்டேம்மா! இந்தா கவி! டிஃபன் சாப்டு! பாத்து! பாத்து உக்காரு." சொல்லிக்கொண்டே சிற்றுண்டி இருக்கும் தட்டைக் கொடுத்தான் அவள் கணவன், தினேஷ்.

கவிதாவுக்கு ஒன்றும் புரிய வில்லை. என்ன நடக்கிறது இந்த வீட்டில். எப்போதும் தொண தொணக்கும் மாமியார் இன்று பாசம் காட்டுகிறார். இரவு 11மணிவரை கடையிலிருக்கும் கணவன் இன்று 9 மணிக்கே  வீட்டிலுள்ளதுமில்லாமல், டிபன் வேறு கொடுக்கிறான். என்ன நடக்கிறது இந்த வீட்டில்! குழம்பிப் போய் கீழே அமர்ந்தவளை பாசத்துடன் பார்த்தான், தினேஷ்.

"சாப்டு கவி! பசிக்குதில்ல! சாப்டாதான மருந்து சாப்ட முடியும்!" என்றவன் தானே ஊட்டவும் செய்தான். அவன் ஊட்டிவிட்ட இட்லியின் முதல் கவளத்தை அவசரமாக விழுங்கிவிட்டு, அடுத்த கவளத்தை மறுத்துவிட்டு பின் பேசினாள்.

"என்ன தினா நீங்க! எனக்குப்போய் உபசாரம் பண்ணிட்டிருக்கீங்க! மொதல்ல அத்தையப் பாருங்க! அழுது அழுது அவங்க முகம் வீங்கிப் போயிருக்கு. எவ்வளவு வலியிருந்தா அவங்க இவ்வளவு அழுதிருப்பாங்க. நகருங்க தினா! அத்தைக்கு மருந்து தடவி விட்டுடறேன்! " என்றுகூறியபடியே, மாமியாரைப் பார்த்து, "காலை காட்டுங்க அத்தை!" என்று திரும்பவும் அருகிலிருந்த மருந்தை கையிலெடுத்தாள்.


விசாலத்துக்கு மருமகளின் மீது மிகுந்த பாசம் உண்டானது. அந்த நொடியில் மனம் நிறைவடைந்தாள். தான் தேர்ந்தெடுத்த தன் மருமகள் சிறந்தவள். தன் மகனுக்கு ஒரு நல்ல பெண்ணை மனைவியாக்கி விட்டோம். தன் கணவன் விட்டுச்சென்ற பணியை செவ்வனே நிறைவேற்றிவிட்டோம் என்ற மனநிறைவு ஏற்பட்டது. "உங்க ஆசையை நிறைவேத்திட்டேங்க." மனதுக்குள் கணவனிடம் சொல்லிக்கொண்டாள். கூடவே கீழே விழுந்து அடிபட்டு மிதிபட்டு வந்திருக்கும் மருமகளை காவல் தெய்வமாக இருந்து காப்பற்றவும் வேண்டிக்கொண்டாள்.


"எனக்கு ஒண்ணுமில்லம்மா! நீதான் கீழ விழுந்து அடி பட்டுகிட்டு வந்திருக்க. காட்டும்மா! எங்க பட்டுச்சின்னு பாக்கறேன்!" என்ற விசாலம், மகனைப்பார்த்து, "நீ ஊட்டிவிடு தினேசு!" என்றார்.

"அ...அ....ஆனா ஒ....ஒ....ஒங்களுக்கு எப்டி தெரியும், அத்தை!" வாய் தந்தியடிக்க மெதுவாகக் கேட்டாள்.

"சரியாப்போச்சு! எனக்கு மட்டுமா தெரியும். ஊருக்கே தெரியும். நீ எங்கிட்ட கைய காட்டு. ஒம்புருசன்கிட்ட வாயக்காட்டு." கட்டளையிட்டபடியே கவிதாவின் கைகளை மெதுவாகத் தடவினார்.


"ஊருக்கேவா? எப்டி? " ஆச்சரியமாகக் கேட்டாள்.


தினேஷ், கவிதாவுக்கு ஊட்டிக்கொண்டே, "டீவில காட்னாங்க! நீயே பாரு!" என்று டிவியை உயிர்ப்பித்தான். கணவன் ஊட்டியதை சாப்பிட்டபடியே டிவியை பார்த்தாள்.


செய்தி சானலில் அன்று மாலையில் சென்னையில் நடந்த மறியல் பற்றியும் அதனால் மக்கள் பட்ட இன்னல்களையும் காட்டினர். பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக மக்கள் கால்கடுக்க நின்றதையும் கும்பலாக வந்த பேருந்தில் ஏறமுடியாமல் தவித்த மக்களையும் காட்டினர். அதில் கூட்டத்தில் நின்ற பெண்ணை க்ளோஸப் ஷாட்டில் காட்டினர். அந்தப்பெண் பேருந்தில் ஏற முயல்வதையும் பின் அது முடியாமல் கீழே விழுவதையும் அவள் மிதிபடுவதையும் சிலர் அவளுக்கு உதவுவதையும் பேருந்து நகரும்போது மிரண்ட அவள் முகத்தையும், அவள் கண்களில் நீர் திரண்டிருந்ததையும் துல்லியமாகக் காட்டினர். அவள் உடம்பின் காயங்கள் கூட சில, அந்த ஷாட்டில் தெரிந்தது. அது தான்தான் என்று கவிதாவுக்குப் புரிந்தது. "இவ்வளவா பயந்தோம்" என்று தனக்குள் கேட்டுக்கொண்டாள்.


விசாலம் மருமகளை ஆய்வுசெய்தபடியே சொன்னார், "எப்டி மிதிச்சி வெச்சிருக்காங்க. பாவிங்க. நீ சாப்டும்மா. தினேசு, கவிதா சாப்டதும் நம்ம டாக்டரப் பாத்து அவளுக்கு ஒரு ஊசி போட்டுகிட்டு வா! இல்லாட்டி வலி கொறையாது! எங்கெங்கல்லாம் பட்டிருக்கோ? எப்டிம்மா தாங்கிக்கிட்ட?"  என்று கூறி வழியும் தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.


"அதெல்லாம் வேணாம் அக்கா! நானே டாக்டரம்மாவ கூட்டுகிட்டு வந்துட்டேன்." சொல்லியபடியே உள்ளே வந்தாள் அடுத்த வீட்டு கமலம். அவளுடன் அவள் கணவன் சிங்காரமும் டாக்டர் பவித்ராவும் வந்தனர்.

டாக்டர் பவித்ரா, மற்றவர்களை வெளியே அனுப்பிவிட்டு கவிதாவை நன்றாக பரிசோதித்தார். கவிதாவின் காயங்கள் சில சிறியதாய் சில பெரிதாய் ஆழமாய் இருந்தது. காலில் சுடிதார் பேண்ட் கிழிந்து முட்டியிலிருந்து ரத்தம் வந்து கொண்டிருந்தது. அந்த இடமே வீங்கி இருந்தது. கைகளிலும் நன்றாக அடி பட்டிருந்தது. இன்னும் தோளிலும் முதுகிலும் சிறிய காயங்கள்.
பின்னர் தினேஷையும் விசாலத்தையும் அழைத்து மருந்து எழுதிக் கொடுத்து விட்டு ஒரு வாரம் ஓய்வெடுக்கும்படி சொல்லிவிட்டு இரவு போட்டுக் கொள்ளும் மாத்திரையை மட்டும் இலவசமாகக் கொடுத்துவிட்டு பீஸே வாங்காமல் சென்று விட்டார்.


கமலம்மாளும் சிங்காரமும் கவிதாவை விசாரித்துவிட்டுச் சென்றனர். மருந்துக் கடை வைத்திருக்கும் எதிர் வீட்டு மோசசும் மேரியும் கூட வந்து குசலம் விசாரித்துவிட்டு டாக்டர் எழுதிக்கொடுத்த மருந்துகளை காலையில் வந்து கொடுப்பதாகக் கூறிவிட்டுச் சென்றனர்.


"நான் இட்லிய அடுப்புல ஏத்திட்டு திரும்பறேன். நம்ம பக்கத்து வீட்டு கமலம்தான் டீவில ஒம்மருமகள காட்றாங்கக்கா! கீழ விழுந்து கிடக்கு! என்ன ஏதுன்னு கேக்க வந்தேன்னு சொல்லிச்சும்மா!" விசாலம் விளக்க ஆரம்பித்தாள்.



"டிவில நீ விழுகறதப் பாத்ததுலேர்ந்து அம்மா அழுதுகிட்டே இருந்தாங்க. அவங்கள சமாதானப்படுத்திட்டு  நான் ஒனக்கு போன் போட்டா சுச்சு ஆப்னு வந்துச்சு. ஒரே படபடப்பா வந்திச்சு. இன்னிக்குன்னு பாத்து இந்த ஓட்ட டிவிஎஸ் பஞ்சராயிருச்சு. இல்லன்னா ஒன்ன பஸ் ஸ்டாப்லேர்ந்து கூட்டிட்டு வந்திருப்பேன்." தினேஷ் தொடர்ந்தான்.


"சரிடா! அவ சாப்பிட்டுட்டா! அவளுக்கு மாத்ரய குடு. இந்தா நீயும் சாப்பிடு. சாப்டுட்டு போய் ரெண்டு பேரும் சீக்கிரம் படுங்க!" என்று மகனிடம் ஒரு தட்டை நீட்டினார் விசாலம்.
"அத்தை! நீங்க சாப்பிடலயா!" அக்கரையுடன் கேட்ட மருமகளிடம், "இதோ! நானுந்தாம்மா சாப்பிடறேன். " என்று கூறி தானும் சாப்பிட்டார் விசாலம்.


தாயும் மகனும் சாப்பிட்டு முடிக்க கவிதா சமையலறையை ஒதுக்கினாள். கொஞ்சம் வலிக்கத்தான் செய்தது. ஆனாலும் மெதுவாகச் செய்து முடித்தாள்.


விசாலம் ஹாலின் ஓரத்தில், தான் வழக்கமாக படுக்கும் இடத்தில் ஒதுங்க, தினேஷும் கவிதாவும் வாசல்கதவு, பின்கதவு மற்றும் ஜன்னல்களை தாழிட்டுவிட்டு மின்விளக்குகளை அணைத்துவிட்டு படுக்கச்சென்றனர்.


"ஆமா! நீங்க என்ன இன்னிக்கு வீட்ல இருக்கீங்க, தினா? எப்பவும் லேட்டாதான வருவீங்க?" கவிதா கேட்டாள்.

"நீ வீட்டுக்கு வந்திருப்ப. ஒங்கிட்ட ஒரு நல்ல விஷயம் சொல்லலாம்னு சீக்கிரமே வந்தேன். கடைசியில இப்டி அடிபட்டுகிட்டு வந்திருக்க."

"நல்ல விஷயமா? என்ன விஷயம், தினா!"

"சொல்றேன். சொல்றேன். மொதல்ல மாத்ரயப் போடு!" என்று கூறி டாக்டர் கொடுத்த மாத்திரையையும் தண்ணீரையும் அவளிடம் நீட்டினான்.

அவள் மாத்திரையை முழுங்கிவிட்டு, "ம்...  மாத்ர சாப்டாச்சு!
இப்பவாஞ்ச்சும் சொல்லுங்களேன், ப்ளீஸ்!" சின்னக் குழந்தையின் ஆவலோடு கேட்கும் மனைவியை அன்போடு பார்த்தான். மென்மையாக புன்னகைத்தபடியே கூறலானான்.


"இனிமே நம்ம கஷ்டமெல்லாம் தீரப் போகுது, கவி! நமக்கு அந்த பேங்க் ஆடர் கெடச்சிருச்சு!"


"நிஜமாவா! அந்த ஆடர் கெடச்சிருச்சா! வாவ்! க்ரேட் தினா! கன்க்ராட்ஸ்!"  என்று கூறி கை கொடுத்து அவனுக்கு வாழ்த்துத் தெரிவித்தாள்.


"அது மட்டுமில்ல! இன்னும் கேளு! என் ஃப்ரண்ட் கார்த்திக் இல்ல! அதான்! சிஏ படிக்கறானே, அவன் ஒரு ஆடிட்டர் கிட்டக்க  ட்ரெய்னிங் எடுத்துக்கறான். அந்த ஆடுட்டராபீஸ்ல ஃப்ரீ லான்ஸரா அக்கவுண்ட்ஸ் டாடா எண்ட்ரீ பண்ண ஒன்ன கூப்டிருக்காங்க! 

ஆபீஸ்ல போயும் வேல பண்லாம், இல்லன்னா வீட்ல வச்சும் வேல பண்லாம். மொதல்ல ஒனக்கு ஒரு செல் போன், அப்றம் ரெண்டு பேரும் ஓட்ற மாதிரி ஒரு வண்டி வாங்கிடனும்."


"வாவ்! தட்ஸ் ரியலீ எ க்ரேட் நியூஸ்! தினா! ஆனா செல்லும் வண்டியும் மெதுவாவே வாங்கிக்கலாம். ஃபர்ஸ்ட் அத்தைக்கு கண்ணாபரேஷன் முடிச்சிரலாம்."



"ஓகே கவி! நீ சொன்னா ஓகேதான். ஆனா இனிமே நீ கஷ்டப்பட்டு வேலக்குப் போக வேணாம்! நம்ம கடைக்கு இனிமே நீதான் மொதலாளி! மொதலாளியம்மா என்ன சொல்றாங்களோ அத செய்றதுதான் இந்த தொழிலாளியோட வேல!"  படபடவென்று கூறிக்கொண்டே அவள் முன் பவ்யமாக கைகட்டி நின்றான்.


"ஹேய்! பத்தீங்களா? " கிண்டல் செய்தவனை அடிப்பது போல பாவனை செய்து விட்டு அவனை தன்னருகில் அமரச்சொன்னாள்.


"ஹ்ம்ம்.... அப்றம் இன்னொரு முக்கியமான விஷ்யம் என்னன்னா......"  என்று கூறி அவளருகில் அமர்ந்து அவள் முகத்தை ஆவலுடன் பார்த்தான்.


"என்ன?" அதே ஆவலுடன் அவள் கேட்க, 

"நம்ம குடும்பம் வளர இனிமே எந்தத் தடையும் இல்ல!" என்று கூறி அவளை அணைத்துக்கொண்டான்.


கவிதாவுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. யாரையும் நல்லவரா கெட்டவரா என  சில விஷயங்களை மட்டும் வைத்து முடிவு செய்யக்கூடாது என்று தான் வளர்ந்த அனாதை ஆசிரமத்தின் தலைவி அடிக்கடி கூறி தனக்கு தன்னம்பிக்கை ஊட்டுவது நினைவுக்கு வந்தது.


மறியல் செய்தவர்களால் டிவிகாரர்கள் பயனடைந்தனர். டிவிகாரர்களால் கவிதா  பயனடைந்தாள். அடிபட்டுக் கொண்டதால் கவிதாவுக்கு மாமியாருடைய, கணவனுடைய, டாக்டர் பவித்ராவுடைய மற்றும் அண்டை அயலாருடைய அன்பு புரிந்தது. அவள் மாமியாருக்கு கவிதாவின் அன்பு புரிந்தது.


மனம் முழுக்க மகிழ்ச்சியுடன் கவிதா கணவன் காட்டிய ஒளிமயமான வாழ்க்கைப் பயணத்தில் முழுமனதுடன் தன்னையும் இணைத்துக்கொண்டாள்.


***************************************************************************