வாழ்க்கை வாழ்வதற்கே!
அப்பாவின் இது போன்ற சுடு சொற்கள் இப்போதெல்லாம் காதுக்குள் அடிக்கடி கேட்கிறது. உயிரே போய் விடுமளவு மனம் வலிக்கிறது. பேசாமல் செத்து விடலாம் என்றால் அம்மாவை நினைத்தால் பாவமாக இருக்கிறது. நான் செத்துப் போனால் அம்மா நடைபிணமாகி விடுவாள். அப்பாவுக்கும் இதுபோல கஷ்டமாக இருக்குமா? அல்லது விட்டது சனியன் என்று இருந்து விடுவாரா?
சே! இப்படியெல்லாம் நினைக்கவே கூடாது. அப்பா நம்ம நல்லதுக்குத் தானே சொல்றாரு! அவரு சொல்றதும் சரிதானே! படிக்கும் போது நல்லா படிக்காம இருந்துட்டு இப்போ அவரு திட்றாரேன்னு நெனக்கறது எந்த வகையில நியாயம்!
தனக்குத் தானே சமாதானம் செய்து கொண்டான் கமலக்கண்ணன்.
"கமலக்கண்ணா! டேய்! கமலக்கண்ணா!"
அம்மாவின் குரல் கேட்டு சமையலறை நோக்கி ஓடினான்.
"டேய்! அண்ணாச்சி கடைல போயி 50 கிராம் மஞ்சத்தூளும் கால் கிலோ வெல்லமும் வாங்கிட்டு வாடா! ப்ளீஸ்!" அம்மா கொஞ்சினாள்.
"ஹ்க்கும்! ஹ்க்கும்! என்னம்மா இது! என்னய எப்ப பாத்தாலும் எதுனா வேல சொல்லிட்டே இருக்க! நான் போவே மாட்டேன்!"
"என்னடா, பத்தாவது படிக்கற பையன் மாதிரி அலுத்துக்கற! ப்ளீஸ், போய் வாங்கிட்டு வாடா!"
அப்பா ஒரு வகை என்றால், அம்மா வேறு வகை. அம்மாவின் கொஞ்சலில் மனம் சமாதானமாகி கடைக்குப்போனான், கமலக்கண்ணன்.
"என்ன தம்பி! போனவாரம் போன இண்ட்ரிவ்யூ ஊத்திக்கிச்சா?"
அண்ணாச்சி இளித்துக்கொண்டே வாழைப்பழத்தில் ஊசியேற்றினார்.
"ஹூம்!" அவரைப்போலவே இளித்து வைத்தான்.
அம்மா கேட்டவற்றை வாங்கிக் கொண்டு நகரும்போது, "அண்ணாச்சி! உங்க பையன் திடீர்ன்னு மயக்கம் போட்டு விழுந்திட்டான். பேச்சு மூச்சில்லாம கிடக்கறான். அக்கா உங்கள கையோட கூட்டிகிட்டு வரச்சொன்னாங்க!" பக்கத்து வீட்டு சின்னையன் படபடவென்று கூறிவிட்டு ஓடினான்.
"டேய்! எசக்கி! கடையப் பாத்துக்கடா! ஐயனாரப்பா! எம்புள்ளயக் காப்பாத்து! என்ன செய்யறதுன்னு புரியலயே!" பெருங்குரலெடுத்து அழுதபடி ஓடினார், அண்ணாச்சி.
கமலக்கண்ணன் அண்ணாச்சியுடன் ஓடினான். அவருடைய மகன் கதிர்வேலன் இவனுக்கு இரண்டாண்டு மூத்தவன். ஆனால் இவனுடைய நண்பர்கள் குழுவில் கதிர்வேலும் ஒருவன்.
அங்கு மயங்கிய நிலையில் கதிர்வேலன் கயிற்றுக் கட்டிலில் கிடந்தான். அவனுடைய அம்மா அருகில் அமர்ந்து ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தாள். சுற்றி நிறைய தெரிந்ந முகங்கள் நின்று கொண்டிருந்தார்கள். ஆனால் யாரும் எதுவும் செய்யத் தெரியாமல் உச்சுக் கொட்டிக் கொண்டிருந்தார்கள்.
"அண்ணாச்சி வண்ட்டாரு! புள்ளய டாக்டராண்ட கூட்டிட்டு போங்க அண்ணாச்சி!" யாரோ ஒரு அறிவாளி கூறினார்.
"கார் இருக்கு! ஆனா யாரு ஓட்டுவாங்க! ஓட்டத் தெரிஞ்சவன்தான் உயிந்து கெடக்கானே!" இது இன்னொரு அறிவாளி.
கமலக்கண்ணனால் இதைக் காணச் சகிக்கமுடியவில்லை. வேகமாக வீட்டுக்கு ஓடினான். அம்மாவிடம் அவள் வாங்கி வரச் சொன்னதை அவள் கையில் கொடுத்துவிட்டு தன்னுடைய அலமாரியில் எதையோ தேடினான். சில நிமிடங்களில் தேடியதைக் கண்டு எடுத்துக் கொண்டு, "அம்மா! முக்கியமான வேலையா போறேன்! வர லேட்டாகும்!" சொல்லிவிட்டு அவசரமாக வீட்டுக்கு வெளியே வந்தான்.
அப்பா உள்ளே வந்துகொண்டிருந்தார். அவர் தன் அர்ச்சனையை ஆரம்பிக்கும் முன் அவர் கால்களில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து எழுந்தான்.
வியப்புடன் பார்த்தவரைப் பார்த்து, "அப்பா ஒரு உயிரைக் காப்பாத்தப் போறேன்! நான் பத்திரமா போயிட்டு வரணும்ன்னு வாழ்த்தி அனப்புங்கப்பா! அந்த உயிருக்கும் எதுவும் கெடுதல் வந்துடக் கூடாதுன்னு வேண்டிக்குங்கப்பா!" வேகமாகப் பேசினான்.
"பத்திரமா போய்ட்டு வாப்பா! அந்த உயிருக்கும் எதுவும் ஆகாதுப்பா! சீக்கிரம் கிளம்பு!" என்று அவசரமாகக் கூறிவிட்டு சுவாமி அலமாரியிலிருந்து விபூதி எடுத்துப்பூசிவிட்டார் அவனுடைய அப்பா!
அப்பா விபூதி இட்டதும், தன் வலது உள்ளங்கையில் கொஞ்சம் விபூதி எடு்த்துக் கொண்டு அண்ணாச்சி வீட்டுக்கு ஓடினான்.
அங்கே இன்னுமும் யாரும் எதுவும் உருப்படியாய் செய்யாமல் உச்சு கொட்டிக் கொண்டிருந்தார்கள்.
"அண்ணாச்சி! வாங்க ! நான் கார் ஓட்டறேன்! கதிரை நான் டாக்டர்கிட்ட கூட்டிட்டு வரேன்! அவனைக் காரில ஏத்துங்க!"
கூறிக் கொண்டே கமலக்கண்ணன் தன் கையிலிருந்த விபூதியை கதிர்வேலனின் நெற்றியில் பூசிவிட்டான்.
அவன் சொல்லிலும் செயலிலும் நம்பிக்கை வரப்பெற்றவராய் உள்ளே ஓடிச் சென்று கார் சாவியைக் கொண்டு வந்து கமலிடம் கொடுத்தார்.
"ஒரு கை புடிங்க!" பேசிக் கொண்டிருந்தவர்கள் உதவியுடன் கதிரை வண்டியில் ஏற்றிக் கொண்டு காரை ஓட்ட ஆரம்பித்தான் கமலக்கண்ணன்.
கமலின் உதவியால் தக்க நேரத்தில் கதிர்வேலன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு காப்பாற்றப் பட்டான்.
அண்ணாச்சி கமலை வாயாரப் புகழ்ந்தார். தனக்குத் தெரிந்த கால் ட்ரைவர் ஏஜென்ஸியில் வேலை வாங்கித் தந்தார்.
கமலின் நண்பர்களும் கார் ஓட்டப் பயிற்சி எடுத்துக் கொண்டு கால் ட்ரைவர் வேலைக்குப் போகிறார்கள். இப்போதெல்லாம் கமலை அவனுடைய அப்பா திட்டுவதே இல்லை.
"கமல்! நல்லா சாப்பிடணும்பா! வண்டி ஓட்டத் தெம்பு வேணும்ல! நல்லா ரெஸ்ட் எடு!" இது அவனுடைய அம்மா சொல்வதில்லை. அப்பாதான் இவ்வளவு பாசமாய் சொல்கிறார்.
கமலக்கண்ணன் வாழ்க்கையை சந்தோஷமாக எதிர்கொள்ளக் கற்றுக் கொண்டு விட்டான். இனி அவன் வாழ்க்கைப் பயணம் அவனுடைய கார் பயணம் போலவே சுகமாக இருக்கும்.
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
No comments:
Post a Comment