Tuesday, 9 August 2016

சகலகலாவல்லி மாலை

Sakala Kala Valli Malai

சகலகலாவல்லி மாலை





கலைமகள் என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது வெள்ளை ஆடை உடுத்திய கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தான். வெண்ணிற ஆடையை அமங்கலம் என்று பலரும் நினைப்பார்கள். ஆனால் சரஸ்வதி வெண்ணிற புடவையை அணிந்திருந்தாலும் அது முழுமையான வெண்ணிற ஆடையாக அல்லாமல் அதன் கரை வேறு நிறம் கொண்டதாக இருக்கும். மேலாடையும் வேறு நிறம் கொண்டதாகவே இருக்கும். இங்கே வெண்மை நிறம் தூய உள்ளத்தினை குறிக்கிறது. வெண்மையான நிறமுடைய அல்லி எனப்படும் வெண்தாமரையில் அமர்ந்திருப்பவள் அன்னை சரஸ்வதி ஆவாள். ஒரு கையில் புத்தக சுவடியும், மறு கையில் செப மாலையும், மற்ற இரு கரங்களிலும் வீணையையும் தாங்கி அருள்பாலிக்கும் அன்னை சகலகலாவல்லி என்னும் சரஸ்வதி ஆவாள்.

இதன் விளக்கம் சரஸ்வதியை வணங்கினால் புத்தகப்படிப்பும், செபத்தில் வெற்றியும், இசையில் அறிவும் பெறலாம் என்பதாகும். சரஸ்வதியை வழிபட்டு பலன் பெற்றவர்கள் ஏராளம். பிரம்மனின் படைப்புகள் முதன் முதலில் பேசும் திறன் இல்லாமல் கிடந்தன. அதன் பின்னர் பிரம்மன் சரஸ்வதியை வேண்ட சரஸ்வதி அன்னை அருள்பாலித்தாள். அதன் பின்னரே பிரம்மனின் படைப்புகள் பேசும் திறமையை பெற்றன.

கலியுகத்தில் சரஸ்வதியை வணங்கி அருள் பெற்றவர்கள் ஏராளம்.
அதில் குறிப்பிடத்தக்கவர்கள் ஒட்டக்கூத்தர் மற்றும் குமரகுருபரர் சுவாமிகள்
ஆவர்.

குமரகுருபரர் வடநாடு சென்று சைவ நெறியை பரப்ப எண்ணினார். கங்கை பாயும் புனித பூமியான காசி மாநகர் சென்று மடம் அமைக்க முனைந்தார். அப்போது காசி மாநகர் முகலாய அரசன் கட்டுப்பாட்டில் இருந்தது. குமரகுருபரர் சரஸ்வதியை குறித்து சகலகலாவல்லி மாலை என்றும் 10 பாடல்கள் கொண்ட தொகுதியை இயற்றி அன்னையின் அருளினால் பன்மொழிப் புலமைப் பெற்றார்.

தன் தவவலிமையால் ஒரு சிங்கத்தினை வசப்படுத்தி அதன் மேல் அமர்ந்து
முகலாய பாதுஷாவின் அரசவைக்கு சென்றார். இவரது திறமையை
கண்ட பாதுஷா வணங்கி வரவேற்றான். குமரகுருபரர் இந்துஸ்தானி
(உருது) மொழியில் பாதுஷாவிடம் உரையாடி தனது நோக்கத்தினை
தெரிவித்தார். பாதுஷா இவரது புலமையைக் கண்டு வியந்து அவர்
தாம் விரும்பும் நிலத்தினை மடம் கட்டுவதற்காக அளித்தான். குமரகுருபரர்
மடம் கட்ட ஏற்ற இடத்தினை சுட்டுமாறு இறைவனை நோக்கி வேண்டினார். கருடன் பறக்காத காசி மாநகரில் கருடன் அந்த இடத்தினை வட்டம் அடித்தது.
பூக்கள் வாசம் வீசாத காசி மாநகரில் பூக்கள் அந்த இடத்தில் வாசம்
வீசின. பல்லி சொல்லாத காசி மாநகரில் பல்லி அந்த இடத்தில்
நல்வாக்கு கூறியது. குமரகுருபரர் அந்த இடத்தினையே பாதுஷாவிடம் இருந்து பெற்றார்.

இத்தகைய சிறப்புடைய சகலகலாவல்லி மாலையை நாம் அனைவரும் தினமும் பாராயணம் செய்து கலைமகளின் அருளினைப் பெறலாம். இதனை
பயன்படுத்தும் முறை பின்வருமாறு:-

அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக கைவிட வேண்டும். பின்பு புதன் கிழமை
அல்லது அஸ்வினி நட்சத்திரம் வரும் நாளில் அல்லது நவமி திதி வரும்
நாளில் அருகில் உள்ள அம்பிகையின் தலத்தில் சரஸ்வதி சிலையின் முன்பாக மஞ்சள் துணி திரி மற்றும் விளக்கெண்ணெய் கொண்டு
இரண்டு தீபங்கள் வடக்கு முகமாக ஏற்றி மேற்கு முகமாக அமர்ந்து சகலகலாவல்லி மாலையை 9 முறை பாராயணம் செய்ய வேண்டும்.
பின்பு வீடு திரும்பி சரஸ்வதி படத்தின் முன்பாக மேற்கண்ட முறையில் இரண்டு விளக்குகள் ஏற்றி மேற்கு முகமாக அமர்ந்து 9 முறை பாராயணம் செய்ய வேண்டும்.

அதன் பின்னர் தினமும் 1 முறை பாராயணம் செய்தாலே போதுமானது.
இரண்டு விளக்குகள் பாராயணம் செய்யும் நேரத்தில் கண்டிப்பாக
எரிய வேண்டும். 48 நாட்கள் பாராயணம் செய்ய வேண்டும். அதற்கு
மேலும் பாராயணம் செய்வது மிகவும் நன்று. முதல் நாளன்றும் கடைசி
நாளன்றும் சுண்டல், சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, எலுமிச்சை
சாதம் இவற்றினை அன்னைக்கு நிவேதிக்கலாம்.

மேற்கண்ட பாராயண முறையால் கல்விச்செல்வம் பெருகும்.
சொல்வன்மை மற்றும் எழுத்துவன்மை உண்டாகும். கல்வித்தடை
அகலும். பன்மொழிப்புலமை ஏற்படும். தேர்வுகளின் மிகப் பெரிய
வெற்றி கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் எளிதாக வெற்றி கிட்டும்.
இசையில் வல்லமை உண்டாகும். கவிபாடும் திறனும் உண்டாகும். வேண்டிய
கோரிக்கைகள் எல்லாம் நிறைவேறும். மிகுந்த அறிவு உண்டாகும். சபைகளில்
மதிப்பும், மரியாதையும் உண்டாகும். மங்களம் உண்டாகும். மனதிலும்,
வீட்டிலும் நிம்மதி உண்டாகும். கவலைகள் பறந்தோடும்.

இத்தகைய சிறப்பு மிக்க சகலகலாவல்லி மாலையை தினமும் பாராயணம்
செய்து சரஸ்வதியின் அருளைப் பெற இறையருளும், குருவருளும் துணை
நிற்கும் என்பதில் ஐயமில்லை.



இத்தகைய சிறப்பு வாய்ந்த சகலகலாவல்லி மாலையை அடுத்து வரும் பதிவுகளில் பகிரவிருக்கிறேன்! 

நன்றி!

No comments:

Post a Comment