Wednesday 14 September 2016

சகலகலாவல்லி மாலை - 5 & 6


சகலகலாவல்லி மாலை




வெண்மையான நிறமுடைய அல்லி எனப்படும் வெண்தாமரையில் அமர்ந்திருப்பவள் அன்னை சரஸ்வதி ஆவாள். ஒரு கையில் புத்தக சுவடியும், மறு கையில் செப மாலையும், மற்ற இரு கரங்களிலும் வீணையையும் தாங்கி அருள்பாலிக்கும் அன்னை சகலகலாவல்லி என்னும் சரஸ்வதி ஆவாள்.



இதன் விளக்கம் சரஸ்வதியை வணங்கினால் புத்தகப்படிப்பும், செபத்தில் வெற்றியும், இசையில் அறிவும் பெறலாம் என்பதாகும். சரஸ்வதியை வழிபட்டு பலன் பெற்றவர்கள் ஏராளம். பிரம்மனின் படைப்புகள் முதன் முதலில் பேசும் திறன் இல்லாமல் கிடந்தன. அதன் பின்னர் பிரம்மன் சரஸ்வதியை வேண்ட சரஸ்வதி அன்னை அருள்பாலித்தாள். அதன் பின்னரே பிரம்மனின் படைப்புகள் பேசும் திறமையை பெற்றன.

என்னுடைய சிற்றறிவுக்குத் தெரிந்த வரையில் பொருளுரை வழங்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்தருள வேண்டுகிறேன்.


சகலகலாவல்லி மாலை



பஞ்சுஅப்பு இதம்தரு செய்யபொற் பாத பங்கேருகம்என்
நெஞ்சத்தடத்து அலராதது என்னே? நெடும்தாள் கமலத்து
அஞ்சத் துவசம் உயர்த்தோன் செந்நாவும் அகமும் வெள்ளைக்
கஞ்சத்து அவிசுஒத்து இருந்தாய் சகலகலாவல்லியே!                                 ( 5 )

திருமாலின் உந்தியில் இருந்து எழுந்த நீண்ட தண்டிடைக் கொண்ட தாமரை மலரில் வீற்றிருப்பவனும் அன்னக்கொடியை உயர்த்திப் பிடித்திருப்பவனுமாகிய நான்முகனின் சிறந்த நாவினையும் மனதினையும் ஆசனமான வெண்தாமரையாக கருதி அங்கு வீற்றிருப்பவளே! சகலகலாவல்லியே!
செம்பஞ்சுக் குழம்பினை பூசி அழகுடன் விளங்கும் செம்மையான பொன்போன்ற தாமரை போன்ற உனது திருவடிகள், எனது மனமாகிய பொய்கையில் இன்னும் மலராதது ஏன் தானோ?
பொய்கைகளில் தாமரை மலர்வது இயல்பு. எனது மனமும் நீர்போன்று மென்மையாக உள்ளது. குளிர்மையாக உள்ளது. நீர்நிலைகளில் எப்படித் தாமரை மலர்வது இயல்போ மென்மையாலும் குளிர்மையாலும் நீர்நிலை போல் ஆகிவிட்ட எனது மனமெனும் பொய்கையில் தாமரை என்னும்  உனது திருவடிகள் இன்னும் மலராது இருப்பது முறையோ என்று வருந்துகின்றார் குமரகுருபரர்.



பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும் யான்
எண்ணும் பொழுது எளிதுஎய்த நல்காய்! எழுதா மறையும்
விண்ணும் புவியும் புனலும் கனலும் வெங்காலும் அன்பர்
கண்ணும் கருத்தும் நிறைந்தாய்! சகலகலாவல்லியே!                                 ( 6 )

வானம், நிலம், நீர், நெருப்பு, காற்று என்னும் ஐம்பூதங்களிலும் எழுதாமறையாகிய வேதத்திலும் அடியார்களின் கண்ககளிலும் கருத்திலும் நிறைந்திருப்பவளே! சகலகலாவல்லியே!  பண், பரதம், நற்கல்வி, இனிய சொற்களால் கொண்டு கவிகள் (நூல்கள்) இயற்றும் ஆற்றல் ஆகியனவற்றையெல்லாம் விரும்பும் காலத்தில் எளிதில் எளியேன் அடையும் வண்ணம் திருவருள் பாலிப்பாயாக!



No comments:

Post a Comment