Monday, 26 September 2016

சகலகலாவல்லி மாலை - 3 & 4


சகலகலாவல்லி மாலை




வெண்மையான நிறமுடைய அல்லி எனப்படும் வெண்தாமரையில் அமர்ந்திருப்பவள் அன்னை சரஸ்வதி ஆவாள். ஒரு கையில் புத்தக சுவடியும், மறு கையில் செப மாலையும், மற்ற இரு கரங்களிலும் வீணையையும் தாங்கி அருள்பாலிக்கும் அன்னை சகலகலாவல்லி என்னும் சரஸ்வதி ஆவாள்.

இதன் விளக்கம் சரஸ்வதியை வணங்கினால் புத்தகப்படிப்பும், செபத்தில் வெற்றியும், இசையில் அறிவும் பெறலாம் என்பதாகும். சரஸ்வதியை வழிபட்டு பலன் பெற்றவர்கள் ஏராளம். பிரம்மனின் படைப்புகள் முதன் முதலில் பேசும் திறன் இல்லாமல் கிடந்தன. அதன் பின்னர் பிரம்மன் சரஸ்வதியை வேண்ட சரஸ்வதி அன்னை அருள்பாலித்தாள். அதன் பின்னரே பிரம்மனின் படைப்புகள் பேசும் திறமையை பெற்றன.

என்னுடைய சிற்றறிவுக்குத் தெரிந்த வரையில் பொருளுரை வழங்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்தருள வேண்டுகிறேன்.


சகலகலாவல்லி மாலை



அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்அமுது ஆர்ந்துஉன் அருட்கடலில்
குளிக்கும்படிக்கு என்றுகூடும்கொலோ? உளம்கொண்டு தெள்ளித்
தெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு
களிக்கும் கலாப மயிலே! சகலகலாவல்லியே!                                                ( 3 )


எப்படி மழை பொழிவதை அறிந்து தோகைவிரித்து மயில் ஆடி மகிழ்கின்றதோ அதுபோன்று பல நூல்களையும் கற்றுத் தெளிந்த புலவர்கள் பொழிகின்ற கவிமழையில் களிப்படையும் சகலகலாவல்லியே! நீ எளியேனுக்கு அருளோடு அளித்த செழுமையான தெளிந்த தமிழ் அமுதத்தை சுவைப்பதன் மூலமாக ஆன்மீக அனுபவத்தை பெற்று உன் திருவருட்கடலில் மூழ்கித் திளைக்கும் நிலை எளியேனுக்கு வாய்க்கப்பெறுமா? அவ்வாறான அரும்பெரும் பேற்றை இந்த எளியேனுக்கு அருள்வாயாக!


தூக்கும் பனுவல் துறைதோய்ந்த கல்வியும் சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்தருள்வாய்! வடநூல்கடலும்
தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவில் நின்று
காக்கும் கருணைக் கடலே! சகலகலாவல்லியே!                                             ( 4 )

கடல் போன்று விரிந்த எண்ணிலாத வடமொழி நூல்களின் கருத்துக்களையும் செழுமை மிகுந்த அருஞ் செல்வமாகிய தமிழ் நூல்களின் கருத்துக்களும் அடியார்களின் நல்ல நாவினின்று எக்காலத்திலும் நீங்காது காத்து அருளும் கருணைக் கடலே! சகலகலாவல்லியே!  அனைவரும் விரும்பும் வண்ணம் சிறப்புடைய பாடல்களை இயற்றும் திறனும் எல்லாத்துறைகளிலும் ஆளுமை தருகின்ற கல்வியும் சொற்சுவை நிரம்பிய வாக்கும் நாள்தோறும் பெருகி வளர்ந்திடு நிலைக்கு எளியேனை ஆளாக்கி அருள்வாயாக!

No comments:

Post a Comment