சகலகலாவல்லி மாலை
வெண்மையான நிறமுடைய அல்லி எனப்படும் வெண்தாமரையில் அமர்ந்திருப்பவள் அன்னை சரஸ்வதி ஆவாள். ஒரு கையில் புத்தக சுவடியும், மறு கையில் செப மாலையும், மற்ற இரு கரங்களிலும் வீணையையும் தாங்கி அருள்பாலிக்கும் அன்னை சகலகலாவல்லி என்னும் சரஸ்வதி ஆவாள்.
இதன் விளக்கம் சரஸ்வதியை வணங்கினால் புத்தகப்படிப்பும், செபத்தில் வெற்றியும், இசையில் அறிவும் பெறலாம் என்பதாகும். சரஸ்வதியை வழிபட்டு பலன் பெற்றவர்கள் ஏராளம். பிரம்மனின் படைப்புகள் முதன் முதலில் பேசும் திறன் இல்லாமல் கிடந்தன. அதன் பின்னர் பிரம்மன் சரஸ்வதியை வேண்ட சரஸ்வதி அன்னை அருள்பாலித்தாள். அதன் பின்னரே பிரம்மனின் படைப்புகள் பேசும் திறமையை பெற்றன.
என்னுடைய சிற்றறிவுக்குத் தெரிந்த வரையில் பொருளுரை வழங்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்தருள வேண்டுகிறேன்.
சகலகலாவல்லி மாலை
சொற்கும் பொருட்கும் உயிராம் மெய்ஞ்ஞானத்தின் தோற்றம்என்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்? நிலம்தோய் புழைக்கை
நற்குஞ்சரத்தின் பிடியோடு அரசன்னம் நாண நடை
கற்கும் பதாம்புயத் தாயே! சகலகலாவல்லியே! ( 9 )
நிலத்தை தொடும்படி உடைய நீண்ட துதிக்கையை உடைய நல்ல பெண் யானையும் அரச அன்னமும் நாணும்படி அழகாக நடைபயிலுகின்ற தாமரைபோன்ற திருவடிகளை உடையவளே! சகலகலாவல்லியே! சொல்லுக்கும் பொருளுக்கும் உயிராக விளங்குகின்ற மெஞ்ஞானவடிவமாக தோன்றி நிற்கின்ற உன்னை நினைத்து உணர்ந்து கொள்ளும் பக்குவம் பெற்றவர்கள் யாரும் இல்லை! (அவ்வாறு உணர்ந்து கொள்வது எளிதான ஒன்றல்ல என்று சுட்டுகிறார் குமரகுருபரர் ) அவ்வாறான பக்குவ ஆற்றலை எளியேனுக்கு அருள்வாயாக!
மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் என்
பண்கண்ட அளவில் பணியச் செய்வாய்! படைப்போன் முதலாம்
விண்கண்ட தெய்வம் பல்கோடி உண்டேனும் விளம்பில் உன்போல்
கண்கண்ட தெய்வம் உளதோ? சகலகலாவல்லியே! ( 10 )
படைக்கும் தெய்வம் நான்முகன் முதலாக சிறப்புடைய தெய்வங்கள் பலகோடி இருந்தாலும் உன்னைப்போன்று கண்கண்ட தெய்வம் வேறு இல்லை என்று தெளிந்து கூறும்படியாக விளங்குபவளே! சகலகலாவல்லியே!
மண்ணுலகம் முழுவதையும் தன் வெண் கொற்றக்குடையின் கீழ் கொண்டு ஆட்சிசெய்யும் மன்னரும் எளியேனின் இனிய தமிழ்ப் பாடலைக் கேட்ட மாத்திரத்தில் பணிந்து வணங்க அருள்செய்வாயாக!
ஆக்கம்: குமரகுருபரர் சுவாமிகள்
No comments:
Post a Comment